Monday, 18 March 2013

IN THE NAME OF ALLAH....

கேரட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..........!! 

கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கண்பார்வை பிரச்சனைகளும், கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் நெருங்கவே நெருங்காது !!!

கேரட்டில் உள்ள வைட்டமின் கண்பார்வைக்கு நல்லது என்று தெரியும். இன்னொரு அதிசயமும் இருக்கிறது. கேரட்டை இரண்டு துண்டாக வெட்டி அதன் உள்பகுதியை உற்று நோக்குங்கள். கிட்டத்தட்ட அது நம் கண்ணின் அமைப்பு போலவே இருக்கும். கேரட்டுக்கு மஞ்சள் நிறத்தை அதிலுள்ள பீட்டாகேரட்டின் என்ற அமிலம் தான் தருகிறது. அந்த பீட்டாகேரட்டின்தான் மனிதக் கண்களில் புரை வராமல் பாதுகாக்கிறது. வயோதிகம் காரணமாக ஏற்படும் பார்வை குறைபாட்டைக்கூட பீட்டாகேரட்டின் தடுத்து நிறுத்துகிறது. பீட்டாகேரட்டின் மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் கூட அது கேரட்டைப் போல பலன் தருவதில்லை என்பதும் உண்மை.

கேரட் ஆப்கானிஸ்தானை பிறப்பிடமாகக் கொண்டது. பல நூற்றாண்டுகளில் பலவித மாறுதல்களுக்குள்ளான காரட் துவர்ப்பு நீக்கப்பட்டு, இனிப்புடன் கிடைக்கக்கூடிய காய் வகைகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

கேரட் செடியின் வேர்ப் பகுதியில் வளரக்கூடியது. ஆரஞ்சு, சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்களில் கேரட் கிடைக்கின்றது. கேரட் பச்சையாகக் கூட சாப்பிடக்கூடியது.

பொதுவாக அனைத்து வீடுகளில் சமைக்கக் கூடிய கேரட்டில் அடங்கியுள்ள சத்துக்கள் பற்றி விவரங்களை இப்போது பார்ப்போம்.

100
கிராம் கேரட்டில் உள்ள சத்துக்கள் :

சக்தி 41 கலோரிகள்

கார்போ ஹைட்ரேட்ஸ் 9 கிராம்
சர்க்கரை 5 கிராம்
நார்சத்து 3 கிராம்
கொழுப்புச் சத்து 0.2 கிராம்
புரோட்டின் 1 கிராம்

வைட்டமின் A - 93% (835 மைக்ரோ கிராம்)
பீட்டா கரோட்டின் - 77% (8285 மைக்ரோ கிராம்)
வைட்டமின் B1 - 3% (0.04 மில்லி கிராம்)
வைட்டமின் B2 - 3% (0.05 மில்லி கிராம்)
வைட்டமின் B3 - 8% (1.2 மில்லி கிராம்)
வைட்டமின் B6 - 8% (0.1 மில்லி கிராம்)
வைட்டமின் B9 - 5% (9 மைக்ரோ கிராம்)
வைட்டமின் C - 12% (7 மில்லி கிராம்)

கால்சியம் - 3% (33 மில்லி கிராம்)
இரும்புச் சத்து - 5% (0.66 மில்லி கிராம்)
மங்கனீஷ் - 5% (18 மில்லி கிராம்)
பாஸ்பரஸ் - 5% (35 மில்லி கிராம்)
பொட்டாசியம் - 5% (240 மில்லி கிராம்)
சோடியம் 2.4 மில்லி கிராம்

இயற்கையாகவே இனிப்புத் தன்மை உடைய கேரட்டை விரும்பாதவர்கள் எவரும் இல்லை எனலாம். இந்த கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் நெருங்கவே நெருங்காது என்பது முழுக்க முழுக்க உண்மை.கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதில் பெரும்பான்மையான சத்துக்கள் விரயம் ஆகாமல் நம்மை வந்து சேரும்.

வைட்டமின் "ஏ" சத்து நிறைந்துள்ள காரணத்தால், இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது.
இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றது. தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.

இவை இரத்தத்தைச் சுத்தப்படுத்தி, விருத்தியும் அடையச் செய்கின்றது. மேலும், குடல் புண்கள் வராமல் தடுக்கிறது. வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது.
கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும்.
பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.

கேரட் சாப்பிட்டால் பெண்களின் மார்பக புற்று நோய் முற்றாமல் காத்துக் கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவின் புளோரிடாவில் புற்று நோய் ஆராய்ச்சிக்கான அமெரிக்க அமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது.
கேரட் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை உண்பதன் மூலம் மார்பகப் புற்று நோயிலிருந்து ஆரம்ப நிலையிலேயே விடுபடலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தக் காய்களில் உள்ள வைட்டமின் "ஏ" விலிருந்து பெறப்படும் ரெட்டினாயிக் அமிலம், புற்று நோய் உண்டாக்கும் செல்களை ஆரம்ப நிலையிலேயே அழித்து விடும். கேரட் சருமத்திற்கு பொலிவைத் தந்து சுருக்கத்தை நீக்குகிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. 

இது பற்றி பிலடெல்பியாவிலுள்ள பாக்ஸ் சேஸ் புற்று நோய் மையத்தின் ஆராய்ச்சியாளர் சாண்ட்ரா பெர்ணாண்டஸ் கூறியதாவது: இந்தக் காய்களிலுள்ள சத்துக்கள் புற்று நோயை ஆரம்ப நிலையில் மட்டுமே அழிக்குமென்றும், நோய் முற்றிய புற்றுச் செல்களை அழிக்காது என்றும் தெரிவித்தார்.

 இறைவனின் திரு பெயரால்..... 


இறையச்சம்  
எல்லா மதங்களும் மனிதனுக்கு இறையச்சம் வேண்டும் என்று கூறுகின்றன. ஆனால் இஸ்லாம் அதையெல்லாம் தாண்டி, ஒரு மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்றால் இறை பக்தி இறையச்சம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றது.

உலகில் பல மாதிரியான தவறுகள் நடந்தவன்னம் தான் இருக்கின்றது, அதை தடுப்பதற்கு பல சட்டங்கள் இருந்தும் அவற்றால் சரிவர செயல் பட முடியவில்லை என்பதே தெரிகிறது. இன்று உலகில் நடக்கின்ற எத்தனையோ கொடுமைகள் நிகழக் காரணம் என்ன? பலரிடம் இறையச்சம் இல்லாமையே காரணமாக இருக்கின்றது. 

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல் பலாத்காரங்கள், ஈவ்டீசிங், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, திருட்டு, விபச்சாரம், லஞ்சம், மனித உமை மீறல்கள் இது போன்ற குற்றங்களைத் தடுக்க வகைவகையான சட்டங்கள் இருந்தும் மனிதனைத் தவறிலிருந்து மீல வைக்க முடியவில்லை. அது ஒருகாலும் நம் சட்டத்தால் முடியாது.

அப்படியெனில் உலகில் மலிந்து கிடக்கின்ற குற்றங்களைக் களையெடுக்க, வேரோடு அழிக்க முடியவே முடியாதா? இத்தீமைகள் ஒவ்வொரு நாளும் நடந்தேறிக் கொண்டு தான் இருக்க வேண்டுமா? இதற்கு ஏற்ற தீர்வு தான் என்ன? என்ற கேள்வி நமக்குள் தோன்றலாம், இதை அழகாகவும் தெளிவாகவும் இஸ்லாம் எடுத்துரைக்கின்றது.

இஸ்லாம் கூறுகின்றது, எவ்வளவு கொடிய தவறாக இருந்தாலும் அதை எளிய முறையில் தடுக்க முடியும் மனித சட்டங்களால் அல்ல! நம் மனதில் மறைந்து கிடக்கும் இறையச்சத்தால் மட்டுமே!

இப்பொழுது நடக்கின்ற கொடுமைகளை விட, பல்லாண்டு காலமாக பல கொடுமைகளைச் செய்தவர்கள் தாம் அரபியர்கள். அவர்களுக்கு வட்டி, மது, மாது, சூது இவைகள் அனைத்தும் அத்துப்படி. அவர்களிடமிருந்து தான் இங்குள்ளவர்கள் இந்தத் தீமைகளைப் படித்திருக்க வேண்டும். இப்படிப் பட்டவர்களிடம் சில காலத்தில் மாபெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது எது? இறையச்சம் தான்.

நபி (ஸல்) அவர்கள் நடந்து செல்கின்றார்கள். ஒரு பேரீத்தம்பழம் கீழே கிடக்கின்றது. அதைப் பார்த்த நபியவர்கள், ''இது ஸதகா தர்மப் பொருளாக இல்லாமலிருந்தால் இதை நான் சாப்பிட்டிருப்பேன்'' என்று கூறினார்கள். (நூல்: புகாரி) 

ஸதகா பொருள் நபியவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தது. எனவே தான் தெருவில் கிடந்த பொருளைப் பார்த்த மாத்திரத்தில் அதைச் சாப்பிடாமல் விடுகின்றார்கள். காரணம் இது தடை செய்யப்பட்ட பொருளாக இருக்குமோ? இதனால் இறைவன் நம்மைத் தண்டித்து விடுவானோ? என்று அஞ்சி இவ்வாறு செய்கின்றார்கள்.

பொதுச் சொத்துக்களை எப்படியாவது அபகரித்து விட வேண்டும் என்று இன்று பல நபர்கள் தங்களின் தலையை பிய்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் அண்ணல் நபியவர்கள் பொதுச் சொத்து தம்மிடம் இருந்து விடக் கூடாது; அது பொது மக்களுக்கு முழுமையாகச் சென்றடைய வேண்டும் என்பதில் முழுக் கவனம் செலுத்தினார்கள்.

''நபி (ஸல்) அவர்களுடன் ஒரு நாள் அஸர் தொழுதேன். அவர்கள் தொழுகை முடிந்தவுடன் மிக வேகமாக மனைவியின் வீட்டுக்குச் சென்றார்கள். நபியவர்களின் விரைவைப் பார்த்த மக்கள் அதிர்ச்சியுற்றனர். மீண்டும் நபியவர்கள் பள்ளிக்கு வந்து மிக விரைவாகச் சென்றதன் காரணத்தை மக்களுக்குக் கூறினார்கள். ''என்னிடத்தில் (பொது மக்களுக்குச் சேர வேண்டிய) சில பேரீத்தம் பழங்கள் இருந்தன. அது என்னிடம் இருப்பதை நான் விரும்பவில்லை. எனவே அதைப் பங்கிட்டுக் கொடுப்பதற்காகத் தான் நான் சென்றேன்'' என்று கூறினார்கள். (நூல்: புகாரி)

இப்படிப்பட்ட தூயவர்களிடத்தில் படித்த நபித்தோழர்கள் எப்படித் தங்கள் வாழ்க்கையில் இறையச்சத்தைக் கடைப்பிடிக்கின்றார்கள் என்று பார்ப்போம்.
நான் என் அடிமையை சாட்டையால் கடுமையாக அடித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது எனக்குப் பின்னாலிருந்து ''அபூ மஸ்வூதே!'' என்ற சப்தம் வந்தது. இருப்பினும் என் கோபத்தினால் அந்த சப்தத்தை நான் விளங்கவில்லை. என்னை அவர் நெருங்கி விடுகின்றார். நான் பார்த்தால் அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள். அப்பொழுது நபியவர்கள், ''அபூ மஸ்வூதே! தெந்து கொள்ளுங்கள்! அபூ மஸ்வூதே! தெந்து கொள்ளுங்கள்!'' என்றார்கள். என் கையில் இருந்த சாட்டை கீழே விழுந்து விடுகின்றது. மீண்டும் நபியவர்கள், ''இந்த அடிமையை அடிப்பதற்கு எந்த அளவுக்கு உம்மால் முடியுமோ அதை விட அல்லாஹ்வால் உம்மைத் தண்டிப்பதற்கு முடியும்'' என்று கூறினார்கள். இதற்குப் பிறகு ஒரு காலத்திலும் நான் என் அடிமையை அடிக்கவில்லை. (நூல்: முஸ்லிம்)

மனித நேயம் என்றால் என்ன என்று கூடத் தெரியாத மோசமான வாழ்க்கை வாழ்ந்த நபித்தோழர்களின் அடிப்படை குணத்தையே மாற்றி விடுகின்றது. அடிமைகளை, விலங்குகளை விட மட்டமாக நடத்தியவர்களை அவர்களும் மனிதர்கள் தாம்; அவர்களுக்கு ஒரு சிறு தீங்கும் ஏற்படுத்தக் கூடாது என்று செயல்பட வைத்தது இந்த இறையச்சம் தான்.

எல்லா தீமைகளுக்கும் முன்னோடிகள் என்று பெயர் எடுத்தவர்கள் கொஞ்ச காலத்திலேயே இறைவனால் பாராட்டப்பட்டனர் என்றால் அதற்குக் காரணம் இறையச்சம் தான். அது தான் மனித உருவில் மிருகங்களாக வாழ்ந்தவர்களை புனிதர்களாக மாற்றியது. இன்னும் அந்த அரபு நபித்தோழர்களின் பெயர்களை நாம் சொல்லும் போது நாமும் சேர்ந்து அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்கின்றோம்.

எல்லா செயல்பாடுகளுக்கும் அடிப்படையாக இறையச்சம் இருக்க வேண்டும். அது இல்லை என்றால் எவ்வளவு பெரிய நன்மையை ஒருவன் செய்தாலும் அதை இறைவன் நிராகத்து விடுவான் என்கின்றது இஸ்லாம்.

(குர்பானியின்) மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். (அல்குர்ஆன் 22:37)

''இறைவன் உங்கள் தோற்றத்தையோ உங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளத்தை (இறையச்சத்தை) பார்க்கிறான்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)

மேற்கூறிய செய்திகளைப் பார்க்கும் போது எல்லாவற்றுக்கும் ஆணிவேர் இறையச்சம் தான் என்பது புரியும்.

இன்றைக்கு இறையச்சம் என்றால் முஸ்லிம்களுக்கு மத்தியில், மிகப் பெய தாடி இருக்க வேண்டும்; ஜுப்பா அணிந்திருக்க வேண்டும்; தலைப்பாகை அணிந்திருக்க வேண்டும்; உலக ஆசைகள் எதுவுமே இல்லாமல் 24 மணி நேரமும் தொழுகை போன்ற வணக்க வழிபாடுகளில் கழிக்க வேண்டும்; இப்படியெல்லாம் இருந்தால் அவர்கள் தான் இறையச்சத்தால் உயர்ந்தவர்கள்; இல்லையென்றால் அவர்களிடம் இறையச்சம் இல்லை என்ற நிலை உள்ளது.இஸ்லாம் இறையச்சத்திற்கு இப்படிப்பட்ட ஒரு அளவுகோலை கூறவில்லை. மனைவி மக்களை விட்டு விட்டு வனவாசம் செல்வது தான் இறையச்சம் என நினைப்பது இஸ்லாத்திற்கு விரோதமானது என்று இஸ்லாம் கூறுகின்றது.

மூன்று நபர்கள் நபி (ஸல்) அவர்களது மனைவிமார்களின் வீட்டிற்கு வந்து நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடு பற்றிக் கேட்டனர். அதற்கு நபியின் மனைவியார் நபியுடைய வணக்கத்தைப் பற்றி விவத்தார்கள். அப்பொழுது, ''முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வணக்கம் இப்படி இருந்தால் நாமெல்லாம் எங்கே!'' என்று வந்தவர்கள் வியந்தனர். எனவே அவர்களில் ஒருவர், ''நான் இனி இரவு முழுவதும் தொழுது கொண்டிருப்பேன்'' என்றார். மற்றவர், ''நான் காலமெல்லாம் நோன்பு நோற்பேன். நோன்பை விடவே மாட்டேன்'' என்றார். மூன்றாமவர், ''நான் பெண்களைத் தொட மாட்டேன். திருமணமே செய்ய மாட்டேன்'' என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். ''இப்படி இப்படியெல்லாம் சொன்னவர்கள் நீங்கள் தாமா?'' என்று வினவினார்கள். ''உங்களை விட அல்லாஹ்வை அதிகம் அஞ்சுபவன் நான் தான். நான் நோன்பு வைக்கிறேன். நோன்பு வைக்காமலும் இருக்கின்றேன். நான் இரவு நேரத்தில் தொழுகின்றேன். உறங்கவும் செய்கின்றேன். நான் பெண்களைத் திருமணம் செய்துள்ளேன். என் இந்த வழிமுறையை யார் புறக்கணிக்கின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்!'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி)

நம்முடைய பார்வையில் இந்த மூன்று பேரும் தவறான முடிவு எதையும் எடுத்து விடவில்லை. ஏதோ தீமையை செய்யப் போகிறோம் என்று கூறவில்லை. ஆனால் அந்தத் தோழர்களை நபி (ஸல்) அவர்கள் கடிந்து கொண்டார்கள் என்றால் இறையச்சம் என்பதன் அளவுகோலை விளங்கலாம். இறையச்சம் என்பது அதிகமான நன்மை செய்வது அல்ல! 24 மணி நேரமும் வணக்கத்தில் ஈடுபாடு கொள்வது அல்ல! மனைவி மக்களைப் பிரிந்து, துறவறம் மேற்கொள்வது அல்ல! குடும்பத்துடன் இருந்து கொண்டு இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் மனைவி மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் செய்வது தான் இறையச்சம் என்பதை இந்தச் செய்தி தெளிவாகத் தெவிக்கின்றது.

ரமளான் மாதம் முழுவதும் முஸ்லிம்கள் நோன்பு நோற்கின்றோம். பகல் முழுவதும் உணவு எதையும் உட்கொள்ளாமல், இல்லறத்தில் ஈடுபடாமல் கழிக்கின்றோம். எல்லாம் எதற்காக? இங்கு தான் இஸ்லாம் மனிதனைப் பக்குவப்படுத்துகின்றது.

நோன்பு நோற்றிருக்கும் போது வீட்டில் உணவு சமைக்கப்பட்டிருக்கும். தனிமையில் இருக்கும் போது அதை உண்டு விட்டால் அது யாருக்கும் தெரியப் போவதில்லை. அவன் நினைத்தால் அந்த உணவைச் சாப்பிடலாம். ஆனால் அவன் சாப்பிடாமல் இருக்கின்றான். ஏன் தெயுமா? அவன் நோன்பு நோற்ற நிலையில் உணவு உட்கொண்டதை மனிதர்களில் யாருமே பார்க்கா விட்டாலும் தன்னைப் படைத்த இறைவன் ஒருவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான். அவன் நம்மைத் தண்டிப்பான் என்ற இறையச்சம் தான் அந்த நோன்பாளியை சாப்பிட விடாமல் தடுக்கின்றது.

தனக்குச் சொந்தமான பொருளாக இருந்தாலும் அதை ரமளான் மாதத்தின் பகல் பொழுதில் உண்பதற்கு இறைவன் தடுத்து விட்டான்; அதைச் சாப்பிட்டால் அவன் நம்மைத் தண்டிப்பான் என்ற காரணத்தால் அதைச் சாப்பிடாமல் புறக்கணிக்கின்றான். நோன்பு நேரத்தில் தன்னுடைய பொருளையே இறையச்சத்தின் காரணமாக சாப்பிடாதவன் அடுத்தவர்களுடைய பொருளைச் சாப்பிட முன்வருவானா?

அடுத்தவர் பொருளை அநியாயமாக அபகரிக்க ஒருவன் நினைக்கும் போது, இறைவன் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற எண்ணம் அவனுக்கு வந்து விட்டால் அந்த அநியாயத்தை அவன் செய்ய மாட்டான். நோன்பு மட்டுமல்லாது இஸ்லாத்தின் ஒவ்வொரு வணக்கமுமே இறையச்சத்தை வளர்ப்பதற்கு உறுதுணையாக அமைந்துள்ளன.சுருக்கமாகக் கூறினால் இறையச்சம் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டிய அவசியமான ஒன்று. அது இல்லையெனில் மனிதன் மனிதனாக வாழ முடியாது. மிருகக் குணம் கொண்டவனாக மாறி விடுவான் என்பது மறுக்க முடியாத உண்மை!

எனவே தீய செயல்களைக் களைந்து, நல்ல செயல்கள் புரிவதற்குத் தேவையான இறையச்சத்தை இறைவன் நமக்குத் தருவானாக!






Saturday, 16 March 2013

உத்தம நபியை உரிய முறையில் நேசிப்போம்!


இறைவனின் திரு பெயரால் . . . . 


இஸ்லாத்தின் அடிப்படை லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. முஹம்மத்(ஸல்)அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதராவார்கள்எனும் ஷஹாதத் கலிமாதான். இதுதான் இஸ்லாத்தின் அத்திவாரம். இதன் மீதுதான் இஸ்லாத்தின் கொள்கை-கோட்பாடுகள், வணக்க-வழிபாடுகள், ஷரீஆ சட்டங்கள் என்பன கட்டியெழுப்பப்பட்டுள்ளன.
நாம் நபி(ஸல்) அவர்களை அல்லாஹ்வின் தூதர்எனச் சாட்சி சொல்வது என்பது வெறும் வெற்று வார்த்தைகளால் மாத்திரம் உறுதியாகி விடாது.
“(நபியே!) நயவஞ்சகர்கள் உம்மிடம் வந்தால், “நிச்சயமாக நீர் அல்லாஹ்வின் தூதரே என நாங்கள் சாட்சி கூறுகின்றோம்என்று கூறுவர். நிச்சயமாக நீர் அவனது தூதர் என்பதை அல்லாஹ் நன்கறிவான். நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் பொய்யர்களே என அல்லாஹ் சாட்சி கூறுகின்றான்.” (அல்குர்ஆன் 63:1)
அல்லாஹ்வின் தூதரை உண்மையில் நேசிக்காது அவரை இறைத் தூதர்என்று முறையாக நம்பாது நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என நாம் சாட்சி கூறுகின்றோம்என அவர்கள் கூறிய சாட்சியத்தை அல்லாஹுதஆலா ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை இந்த வசனம் தெளிவுபடுத்துகின்றது. எனவே நாம், கூறும் சாட்சியம் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென்றால் அந்தச் சாட்சியத்தில் முக்கிய சில பண்புகள் அடங்கியிருக்க வேண்டும்.
இஸ்லாத்தின் அத்திவாரத்தின் ஒரு பகுதியான முஹம்மத்(ஸல்)அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என நான் சாட்சி கூறுகின்றேன் என்றசாட்சி உண்மையாக வேண்டுமென்றால் நம்மிடம் பின்வரும் பண்புகள் வெளிப்பட்டேயாக வேண்டும்.
- நபி(ஸல்) அவர்களை உண்மைப்படுத்துவது அவசியம். எல்லா முஸ்லிம்களும் அவர் அல்லாஹ்வின் தூதர்என உண்மைப்படுத்துகின்றனர். ஆனால், நபியை உண்மைப்படுத்துவது என்பது அவர் அறிவித்த அனைத்தையும் உண்மைப்படுத்துவதைக் குறிக்கும். நான் நபியை ஏற்றுக்கொள்கின்றேன்அவர் கூறிய இன்னின்ன செய்திகள் பகுத்தறிவுக்கும், விஞ்ஞானத்திற்கும், நடைமுறைக்கும் பொருத்தமில்லாதவை. அதற்கு என்னால் உடன்பட முடியாதுஎன்ற தோரணையில் பேசுவது நபியை உண்மைப்படுத்துவதாகாது. அடுத்து, நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் வஹியை மனிதர்களுக்கும், ஜின்களுக்கும் எத்திவைப்பதற்காக அனுப்பப்பட்ட இறுதித் தூதர் என நம்புவதும் நபியை உண்மைப்படுத்துதல் என்பதில் அடங்கும்.
- நபி(ஸல்) அவர்களுக்குக் கட்டுப்படுவதும், அவர்களது தீர்ப்பை எத்தகைய அதிருப்தியும் இல்லாது முழு மனதுடன் ஏற்றுக்கொள்வதும் அவசியமாகும். நபி(ஸல்) அவர்களது ஸுன்னாவைப் பின்பற்றுவதும், அதற்கு மாற்றமானதை விட்டு விடுவதும் ஷஹாதாக் கலிமாவில் அடங்கக் கூடியதாகும்.
- அடுத்து, நபி(ஸல்) அவர்களை நேசிக்க வேண்டும். இது சாதாரண நேசம் அல்ல. தனது பெற்றோர், பிள்ளைகள், மற்றோர் ஏன்! தனது உயிரை விட அதிகமாக நபியை நேசிக்க வேண்டும். இந்த நேசம் என்பது வாய் வார்த்தையில் மட்டுமல்லாது நடைமுறையிலும் இருக்க வேண்டும். நபி(ஸல்) அவர்களைக் கண்ணியப்படுத்துவதும், அவர்களுக்கு உதவி செய்வதும், அவர்கள் மூலம் கூறப்பட்ட செய்திகளை நடைமுறைப்படுத்துவதும், நபி(ஸல்) அவர்களுக்கு எதிராகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களை மறுப்பதும் இந்த நபி மீதான நேசத்தின் சான்றுகளாக இருக்கும்.
எமது குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும் போது முஹம்மத்எனப் பெயர் வைத்து விட்டால் நாம் நபியை நேசிப்பதாய் விடாது. அல்லது அவர்களது பிறந்த தினத்திற்கு விழா எடுத்தால் அது நபி மீது நேசம் கொண்டதற்குச் சாட்சியாகவும் அமைந்து விடாது.
மேலே நாம் கூறியது போன்று நமது ஷஹாதத் கலிமா ஏற்றுக்கொள்ளப்படுவதற்காக நாம் ஆற்ற வேண்டிய பணிகள் சிலவற்றைச் சுருக்கமாக நோக்குவோம்.
- நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்பதற்கான சான்றுகளை உங்கள் சிந்தனையில் பதியச் செய்யுங்கள்! இந்தச் சிந்தனையின் அடிப்படை குர்ஆன்தான். எனவே, நபி(ஸல்) அவர்களது தூதுத்துவம் பற்றிக் கூறும் குர்ஆன் வசனங்களை சிந்தித்துப் பாருங்கள்!
- நபி(ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டும் என்பதைக் கூறக் கூடிய குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் கற்றுக்கொள்ளுங்கள்!
- இந்த உம்மத்தில் உள்ள அறிஞர்களின் தியாகத்தின் மூலமும், நுணுக்கமான ஆய்வின் மூலமும் நபி(ஸல்) அவர்களது ஸுன்னாவை அல்லாஹ் பாதுகாத்துள்ளான். ஏனைய எந்த சமூகம் கவனம் செலுத்தாத அளவுக்கு இந்த உம்மத் நபியின் ஸுன்னாவைப் பாதுகாப்பதற்கும், அதில் நுழைந்த கலப்படங்களைக் களைவதற்கும் செய்த தியாகங்களை அறிந்துகொள்ளுங்கள்!
(அப்போதுதான் ஸுன்னாவின் பெறுமதியையும், போலிச் செய்திகளைப் புறக்கணிக்க வேண்டியதன் அவசியத்தையும் உங்களால் உணர முடியும்.)
- நபி(ஸல்) அவர்களை நீங்கள் நேசிக்கின்றீர்கள் என்பதை நேரடியாகக் காட்டுங்கள்! உள்ளத்தளவில் அவரது உயர்ந்த பண்புகளை நினைவுக் கூறுங்கள்! நீங்கள் ஒரு நடிகனையோ, விளையாட்டு வீரனையோ, அரசியல் தலைவனையோ விரும்பினால் அவனது பெயர், பிறந்த இடம், வரலாறு, செய்த சாதனைகளை அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுகின்றீர்கள். நபியை நேசிக்கும் நாம், நபி(ஸல்) அவர்களது பரிபூரணமான பண்புகள், நடைமுறைகள், வாழ்க்கை முறைகளை அறிந்துகொள்வதில் ஆர்வமற்றிருக்கலா? எனவே, நபி(ஸல்) அவர்களைப் பற்றிப் பேசும் ஷமாயிலுத் திர்மிதி” (தமிழில்: நபிகள் நாயகம் நேர்முக வர்ணனை) போன்ற புத்தகங்களைப் படித்து அறிந்துகொள்ள வேண்டும்.
- அவரது மகத்துவத்தையும், சிறப்பையும் அறிந்திருக்க வேண்டும். நபி(ஸல்) அவர்கள் தனது தூதுத்துவப் பணியை கொஞ்சம் கூடக் குறைவின்றிப் பரிபூரணமாக நிறைவேற்றினார்கள்என நம்ப வேண்டும். எங்கள் அனைவரை விடவும் அவர் சிறந்தவர் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். (இந்த நம்பிக்கை உறுதியாக இருந்தால்தான் நபிமொழிக்கு மாற்றமாக யார் பேசினாலும் நம்மால் அதைப் புறக்கணிக்க முடியும். இல்லையென்றால் இவர் பெரிய அறிஞர்”, “சேவை செய்தவர்என்றெல்லாம் காரணம் கூறி நபிமொழியை விடத் தனி நபரின் கூற்றுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து விடுவோம்.)
- நபி(ஸல்) அவர்கள்தான் எமது வழிகாட்டிளூ நபிவழியே நம் வழி. அல்லாஹ்வின் அன்பைப் பெற அவரது வழிகாட்டல் ஒன்றின் மூலம் மட்டுமே முடியும் என்பதை உறுதிப்படுத்துவதாக எமது வாழ்க்கை அமைய வேண்டும்.
- நபி(ஸல்) அவர்கள் இந்த உம்மத்தின் மீது பேரன்பும், கிருபையும் கொண்டவர்கள் என்பதை நம்ப வேண்டும்.
- நபி(ஸல்) அவர்களது கண்ணியத்தையும், அவர்களுக்கு அல்லாஹ்விடம் இருக்கும் உயர்ந்த ஸ்தானத்தையும் அல்லாஹ் அவர்களைக் கண்ணியப்படுத்தியுள்ள விதத்தையும் விளக்கும் குர்ஆனிய வசனங்களையும், ஹதீஸ்களையும் அறிந்துகொள்ள வேண்டும்.
- நபி(ஸல்) அவர்களை நேசிக்குமாறு நாம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளோம் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
- நபி(ஸல்) அவர்களைக் கண்ணியப் படுத்துமாறு நாம் ஏவப்பட்டுள்ளோம்.
அல்லாஹ்தஆலா தன் திருமறையில்;
நம்பிக்கை கொண்டோரே! உங்கள் சப்தங்களை நபியின் சப்தத்திற்கு மேலால் உயர்த்தாதீர்கள். மேலும், உங்களில் சிலர் மற்றும் சிலருடன் சப்தமிட்டுப் பேசுவது போன்று அவருடன் சப்தமிட்டுப் பேசாதீர்கள்;. (ஏனெனில்,) நீங்கள் உணராத நிலையில் உங்கள் செயல்கள் அழிந்து விடும். நிச்சயமாக எவர்கள் தமது சப்தங்களை அல்லாஹ்வின் தூதரிடத்தில் தாழ்த்திக்கொள்கிறார்களோ, அவர்களது உள்ளங்களை அல்லாஹ் பயபக்திக்காகப் பரிசுத்தமாக்கினான். அவர்களுக்கு மன்னிப்பும் மகத்தான கூலியும் உண்டு. (49:2-3)
இத்தூதரை அழைப்பதை உங்களுக்கிடையில் சிலர் சிலரை அழைப்பது போன்று ஆக்கிக்கொள்ளாதீர்கள். உங்களில் யார் மறைவாக நழுவிச் செல்கிறார்களோ அவர்களை அல்லாஹ் நன்கறிவான். அவரின் கட்டளைக்கு மாறு செய்வோர் தமக்கு ஒரு துன்பம் நேருவதையோ, அல்லது தமக்கு நோவினை தரும் வேதனை ஏற்படுவதையோ அஞ்சிக்கொள்ளட்டும். (24:63)
இன்று நபி(ஸல்) அவர்கள் நம்மிடையே இல்லையென்றாலும் அவர்களது வழிமுறையும், பொன்மொழிகளும் இருக்கின்றன. நபிவழிக்கும், நாயக வாக்கியங்களுக்கும் கண்ணியமளிப்பது எமது மார்க்கக் கடமையாகும்.
நபி(ஸல்) அவர்களைப் பாதுகாப்பது எமது மார்க்கக் கடமையாகும். இந்த வகையில் நபி(ஸல்) அவர்களை நோவினை செய்யும் விதத்தில் அல்லது அவர்களது அந்தஸ்தைக் குறைக்கும் விதத்தில் செய்யப்படும் அனைத்துச் சதிகளுக்கு எதிராகவும் போராடுவதும் எமது மார்க்கக் கடமையாகும்.
இதனை;
“…எவர்கள் அவரை நம்பிக்கை கொண்டு, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவியும் செய்து, அவருடன் இறக்கப்பட்டிருக்கும் (குர்ஆன் எனும்) ஒளியையும் பின்பற்றுகின்றார்களோ அவர்கள்தாம் வெற்றியாளர்கள்” (7:157) என்ற வசனம் தெளிவாக உணர்த்துகின்றது.
- எனது சக்திக்கும், ஆற்றலுக்கும் ஏற்ப முடிந்த அளவு நபி(ஸல்) அவர்களுக்கு நுஸ்ரத்செய்வேன் என உண்மையான உள உறுதிப்பாட்டை எடுத்தல் வேண்டும்.
- நபி(ஸல்) அவர்களை முறையாக நேசித்தால் சுவனத்தில் அவர்களுடன் இருக்கும் பாக்கியம் நமக்குக் கிடைக்கும். ஒரு நபித் தோழர், “நான் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசிக்கின்றேன்என்று கூறிய போது, “நீ யாரை நேசித்தாயோ அவர்களுடன் இருப்பாய்என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்த மகத்தான பாக்கியத்தை மனதில் வைத்து அவர்களை உண்மையாக நேசிக்க வேண்டும்.
- நபி(ஸல்) அவர்கள் மீதுள்ள எமது நேசத்தை வெளிப்படுத்துமுகமாக நபியவர்கள் கற்றுத் தந்த ஸலவாத்தை அதிகமதிகம் ஓத வேண்டும். குறிப்பாக நபியவர்கள் நினைவுகூறப்படும் போதும், அதானுக்குப் பின்னரும், வெள்ளிக் கிழமை தினம் மற்றும் சகல சந்தர்ப்பங்களிலும் ஸலவாத்து ஓதி அந்த நன்மையைப் பெற்றுக்கொள்ள முனைய வேண்டும்.
- நபி(ஸல்) அவர்கள் மீது நேசம் கொண்டவர்கள் நபி(ஸல்) அவர்களது வாழ்க்கை வரலாற்றையும், அது தரும் படிப்பினைகளையும் அதிகமதிகம் படித்துப் பயன்பெற வேண்டும். நபியை நேசிக்கின்றேன்!என்று கூறிக்கொண்டு அவரது அவரது வாழ்வு பற்றிப் படிக்காமல் இருக்க முடியாது.
- நபி(ஸல்) அவர்களது பொன்மொழிகளைப் படிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும். புகாரி, முஸ்லிம், திர்மிதி, அஹ்மத், அபூதாவூத் போன்ற ஹதீஸ் கிரந்தங்களும், ரியாளுஸ் ஸாலிஹீன், புழூஹுல் மறாம் போன்ற ஹதீஸ் தொகுப்புக்களும் இன்று தமிழில் வெளிவந்துள்ளன. இந்த மொழிபெயர்ப்புக்கள் மூலம் நபிமொழிகளை அறிந்துகொள்ளலாம்.
- நபி(ஸல்) அவர்களின் ஸுன்னாக்களைப் பின்பற்றுவதில் ஆர்வம் காட்ட வேண்டும். வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் நபி(ஸல்) அவர்களையே முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்.
- நபி(ஸல்) அவர்களது எந்த ஸுன்னத்தையும் இழிவுபடுத்துவதை விட்டும், கேலி செய்வதை விட்டும் தவிர்ந்திருத்தல் வேண்டும். இன்று எம்மில் சிலர் தாடி வைத்தல் போன்ற ஸுன்னாக்களை இழிவுபடுத்துகின்றனர். இது நபியை இழிவுபடுத்துவது போன்று குற்றமாகக் கருதப்படும்.
- மக்கள் மத்தியில் ஸுன்னா முக்கியத்துவம் பெறும் போதும், நடைமுறைப்படுத்தப்படும் போதும், மேலோங்கும் போதும் மகிழ்வடைய வேண்டும்.
- சில ஸுன்னாக்கள் மக்கள் மத்தியில் மறைந்து போயிருப்பது குறித்து கவலை கொள்ள வேண்டும்.
- நபி(ஸல்) அவர்களையோ, அவர்களது ஸுன்னாவையோ விமர்சிப்பவர்கள் மீது கோபம் கொள்வதும் நபி மீதான நேசத்தை வெளிப்படுத்தும் அம்சமாகும்.
- நபி(ஸல்) அவர்களது மனைவியர், அவர்களது சந்ததியினர் மற்றும் நபி(ஸல்) அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த முஃமின்கள் அனைவரையும் நேசிக்க வேண்டும்.
- நபி(ஸல்) அவர்களது தோழர்களான ஸஹாபாக்கள் அனைவரையும் நேசிக்கவும், மதிக்கவும் வேண்டும். அத்துடன் மார்க்க அறிவு, பேணுதல், அல்லாஹ்விடம் பெற்றுள்ள அந்தஸ்து அனைத்திலும் அவர்கள் பின்னால் வந்தவர்களை விட உயர்வானவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
- “உலமாக்கள் நபிமார்களின் வாரிசுகள்என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் நபிவழியைப் போதிக்கும் உலமாக்களை நேசிப்பதும், கண்ணியப்படுத்துவதும் நபி(ஸல்) அவர்கள் மீதான எமது நேசத்தை வெளிப்படுத்தும் அம்சமாக அமையும்.
குடும்ப மட்டத்தில் நபியை நேசிக்க..
எமது குடும்ப அமைப்பில் நபி மீது நாம் கொண்டுள்ள நேசத்தை வெளிப்படுத்தப் பின்வருவன போன்ற செயல் திட்டங்களை முன்னெடுக்கலாம்.
- நபி(ஸல்) அவர்களை நேசிக்கும் அடிப்படையில் குழந்தைகளை வளர்த்தல், பயிற்றுவித்தல்.
- உண்பது, உறங்குவது, மல-சல கூடத்துக்குச் செல்வது போன்ற விடயங்களில் குழந்தைகள் நபிவழியைப் பின்பற்றப் பயிற்றுவித்தல்.
- நபி(ஸல்) அவர்களது வரலாற்றைப் பிள்ளைகளுக்குக் கற்பித்தல். அதற்கான நூற்கள், இறுவட்டுக்களைக் குழந்தைகளுக்கு அன்பளிப்புச் செய்தல்.
- சின்னச் சின்ன நபிமொழிகளையும், அன்றாட வாழ்வில் ஓத வேண்டிய அவ்றாதுகளையும் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்தல்.
கல்விக் கூடங்கள்:
நீங்கள் ஒரு ஆசிரியராகவோ, அதிபராகவோ இருக்கலாம். அல்லது பல்கலைக்கழக மாணவ அமைப்புக்களின் பொறுப்புதாரிகளாகவோ, பேராசிரியர்களாகவோ இருக்கலாம். நீங்கள் அல்லாஹ்வின் தூதரை உண்மையாக நேசிக்கின்றீர்கள் என்பதை நடைமுறையில் நிரூபித்தாக வேண்டும். அதற்காகப் பின்வரும் செயற்திட்டங்களை முன்னெடுக்கலாம்.
- உங்கள் மாணவர் மனதில் நபி(ஸல்) அவர்கள் மீதான நேசத்தை விதையுங்கள்! (ஒரு கம்யூனிஸவாதி கார்ல் மார்க்ஸ் மீது பற்றை விதைக்கும் விதத்தில் தனது பாடத்தையும், உதாரணத்தையும் அமைத்துக்கொள்ளும் போது ஒரு முஸ்லிம் நபி(ஸல்) அவர்கள் மீது நேசத்தை விதைக்க முயலக் கூடாதா என்ன!?)
- நபி(ஸல்) அவர்களது பன்முக ஆளுமைகளை விபரிக்கும் விதத்தில் அதிகமான செயலமர்வுகளை நடத்தலாம்.
- நபி(ஸல்) அவர்களது வரலாறு குறித்த ஆய்வுகளை உற்சாகப்படுத்தி இது தொடர்பான நூலாக்க முயற்சிகளை ஊக்குவிக்கலாம்.
- பொது வாசிகசாலைகளில் நபி(ஸல்) அவர்களது வாழ்வு, வரலாறு, ஆளுமை குறித்துப் பேசும் நூற்களை வைக்கலாம். அந்நியர்களது வாசிகசாலைகளுக்கும் நாமே இது தொடர்பான நூற்களை அன்பளிப்புச் செய்யலாம். இல்லையென்றால் இஸ்லாத்தின் எதிரிகளின் நூற்கள்தான் அந்த இடத்தை நிரப்பும். நபி(ஸல்) அவர்களைப் பற்றி அறிய விரும்பும் ஒரு அந்நிய வாசகன் இஸ்லாத்தின் எதிரிகளின் நூற்களை எடுத்துத்தான் வாசிப்பான். இதைத் தவிர்ப்பதற்கும், நபி(ஸல்) அவர்கள் பற்றிய உண்மையான-உயர்வான வரலாறு பிற மக்களைச் சென்றடையவும் இந்தத் திட்டம் உதவும்.
- நபி(ஸல்) அவர்களது வாழ்வு, வழிகாட்டல் தொடர்பான வருடாந்தப் போட்டி நிகழ்ச்சிகளை நடத்தலாம். இதில் அந்நியர்களும் பங்குகொள்ள வாய்ப்பளிக்கலாம். இதன் மூலம் நபி(ஸல்) அவர்களது வாழ்வை அனைவரும் ஆர்வத்துடன் படிக்கும் நிலையை உருவாக்கலாம். இதற்காகக் கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டிகளை நடத்தலாம்.
- இளைஞர்-யுவதிகளுக்காக விடுமுறை நாட்களில் ஆழமான, விரிவான கருத்தரங்குகளை ஏற்பாடு செய்யலாம்.
அறிஞர்கள் தாயிகள் (அழைப்பாளர்கள்)
நீங்கள் மக்களுக்கு மார்க்கத்தைப் போதிக்கும் இமாமாகவோ, தஃவாப் பணியில் ஈடுபாடு கொண்டவராகவோ, அறிவைத் தேடும் மாணவராகவோ இருந்தால் பின்வரும் பணிகளூடாக நபி(ஸல்) அவர்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் பற்றையும், பாசத்தையும் பறை சாட்டலாம்.
- நபி(ஸல்) அவர்களது பிரச்சாரத்தினதும், அவர்களது தூதுத்துவப் பணியினதும் தனித்துவங்களை மக்களுக்குத் தெளிவுபடுத்தலாம்.
- நபி(ஸல்) அவர்கள் முழு மனித சமுதாயத்திற்குமான வழிகாட்டியாவார்கள். இந்த வகையில் குல-நிற-கோத்திர-பிரதேச வேறுபாடுகளையும் தாண்டி அனைத்துலக மக்களிடமும் நபி(ஸல்) அவர்களது தூதுச் செய்தியைத் தன் சக்திக்கு ஏற்பச் சுமந்து செல்லுவதன் மூலமும், அதற்கான முயற்சிகளை முடுக்கி விடுவதன் மூலமும் உங்கள் அன்பை உறுதி செய்யலாம்.
- அழகிய நடையில் நபி(ஸல்) அவர்களது சிறப்புக்களையும், அவர்களைப் பின்பற்றும் சமூகத்தினது தனித்தன்மையையும் பிற மதத்தவர்களுக்கு எடுத்துரைத்தல்.
- நபி(ஸல்) அவர்களது வாழ்வை மக்களுக்குத் தெளிவுபடுத்துதல், நபித்துவத்திற்கு முந்திய-பிந்திய அவர்களது தூய வாழ்வையும், அவர்களது சிறப்பான பண்பாடுகளையும் தெளிவுபடுத்துதல்.
- நபி(ஸல்) அவர்கள் தமது குடும்பத்தினர், அண்டை அயலவர், தோழர்கள் என்போருடன் எவ்வாறு உறவுகளைப் பேணினார்கள் என்பதை விளக்குதல்.
- நபி(ஸல்) அவர்கள் தமது எதிரிகளுடனும், யூத-கிறிஸ்தவர்களுடனும், இணைவைப்போருடனும் எத்தகைய மனித நேயத்துடன் நடந்து கொண்டார்கள் என்பதைத் தெளிவுபடுத்துதல். குறிப்பாக இஸ்லாத்தின் எதிரிகள் நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம் அல்லாதவர்களுடன் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டார்கள் என விமர்சிக்கப்படும் இந்தச் சூழலில் நபி(ஸல்) அவர்கள் அந்நியர்களுடன் மேற்கொண்ட அன்னியோன்யமான உறவு குறித்து தெளிவுபடுத்துதல் அவசியமாகும்.
- காலையில் கண்விழித்ததிலிருந்து இரவு உறங்கும் வரை அவர்களது அன்றாட நடவடிக்கை எப்படி அமைந்திருந்தது? என்பதைத் தெளிவுபடுத்தல்.
- குத்பா உரைகளில் குறிப்பிட்ட ஒரு நேரத்தை நபி(ஸல்) அவர்கள் மீது பற்றையும், பாசத்தையும் ஏற்படுத்தத்தக்க அவர்களது அழகிய வாழ்க்கையை மக்களுக்கு முன்வைக்கப் பயன்படுத்துதல்.
- தொழுகையில் நபி(ஸல்) அவர்களது வாழ்வோடு சம்பந்தப்பட்ட ஆயத்துக்கள் ஓதப்பட்டால் 5 அல்லது 10 நிமிடங்கள் தொழுகை முடிந்ததும் அந்த ஆயத்தின் அர்த்தம் நபி(ஸல்) அவர்கள் அதைக் கடைப்பிடித்த விதம் அல்லது அது என்ன காரணத்திற்காக அருளப்பட்டது? என்பதைச் சுருக்கமாக மக்களுக்கு விளக்கலாம்.
- குர்ஆன் வசனங்களைப் பாடமிட ஆர்வமூட்டுவது போன்று சின்னச் சின்ன ஹதீஸ்களை மனனமிடப் பயிற்றுவிக்கும் மஜ்லிஸ்களை ஏற்பாடு செய்யலாம்.
- நபி(ஸல்) அவர்களது செயற்பாடுகளையும், வழிமுறைகளையும் விமர்சிப்பவர்களை விட்டும் விலகி இருப்பதன் அவசியத்தை மக்களுக்கு உணர்த்த வேண்டும்.
- நபி(ஸல்) அவர்கள் மீது நேசம் வைப்பதிலும், அவர்களது சிறப்பைப் பேசுவதிலும் எல்லை மீறிச் சென்று விடக் கூடாது என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்துதல். இந்த எல்லை மீறும் போக்கு எம்மை அறியாமலேயே எம்மை ஷிர்க்கில் தள்ளி விடும் என மக்களை விழிப்படையச் செய்தல் வேண்டும்.
- நபி(ஸல்) அவர்களது உண்மையான வரலாற்றைக் கற்பதை மக்களுக்கு ஆர்வமூட்ட வேண்டும்.
- நபி(ஸல்) அவர்களின் வரலாறு சிறப்பு என்ற பெயரில் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை மக்களுக்கு இனம் காட்டி நபி(ஸல்) அவர்களது தூய வரலாற்றின் தூய்மையைப் பாதுகாக்க வேண்டும்.
- நபி(ஸல்) அவர்களது வாழ்வு, வரலாறு குறித்து மக்களிடம் காணப்படும் ஐயங்களைத் தெளிவுபடுத்துதல் வேண்டும்.
அறிஞர்கள், சிந்தனையாளர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள்:
இவர்கள் தனி நபராக இருந்து சமூகத்தில் பாரிய தாக்கத்தை விளைவிக்கக் கூடியவர்கள். இந்த வகையில் நபி(ஸல்) அவர்கள் மீது பற்றும், பாசமும் கொண்ட இத்தகைய ஊடகவியலாளர்களும், சிந்தனையாளர்களும் பின்வருமாறு பணியாற்றலாம்.
- சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பயன்படுத்தி நபி(ஸல்) அவர்களது பண்புகளையும், தனித்தன்மைகளையும் மக்களுக்கு எடுத்து வைக்கலாம். உதாரணமாக, நபி(ஸல்) அவர்களை குண்டு வைப்பவராகக் கார்டூன் வரையப்பட்டு அது பரபரப்பை ஏற்படுத்திய சந்தர்ப்பத்தில் நபி(ஸல்) அவர்கள் காபிர்களுடன் நடந்து கொண்ட விதம், எதிரிகளை மன்னித்த அவர்களது பண்பு, அவர்களின் அன்பான வாழ்வை மக்களுக்கு எடுத்து வைக்கலாம். அதே போன்று நபி(ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்த போர் தர்மங்கள், ஒழுங்குகள் என்பவற்றை பகிரங்கப்படுத்தலாம்.
நபிவழியில் குறை காணும் கருத்துக்களையோ, கட்டுரைகளையோ, செய்திகளையோ வெளியிடக் கூடாது.
- ஊடகவியலாளர்கள், பத்திரிகையாளர்கள், செய்தியாளர்களுக்கான செயலமர்வுகளை ஏற்படுத்தி நபி(ஸல்) அவர்களது உண்மையான வரலாற்றைப் பல்வேறு கோணங்களில் முன்வைக்கலாம். அதன் மூலம் அந்த ஊடகவியலாளர்கள் நபி(ஸல்) அவர்கள் குறித்து தப்பும் தவறுமாகச் செய்தி வெளியிடுவதைத் தவிர்க்கலாம்.
- நபி(ஸல்) அவர்கள் குறித்து மாற்று மத அறிஞர்கள் வெளியிட்டுள்ள நல்ல கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பலாம்.
- நாட்டில் உள்ள மாற்று மதம் சார்ந்த அறிஞர்கள், சிந்தனையாளர்களை அழைத்து நபி(ஸல்) அவர்களது வாழ்வு, அவரது அரசியல்-சமுகப் பணிகள் குறித்து விரிவான கலாச்சார மாநாடுகளை நடத்தலாம்.
- முஸ்லிம் அல்லாதவர்கள் மட்டும் பங்குகொள்ளும் விதத்தில் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த போட்டி நிகழ்ச்சிகளை தொலைத் தொடர்பு சாதனங்கள் ஊடாக நடத்தலாம். அவர்கள் ஆக்கங்கள் தயாரிக்கத்தக்க தகவல்களை நாமே நூற்களாக வெளியிடலாம். இதன் மூலம் நபி(ஸல்) அவர்களது வாழ்வை அந்நியர்களும் படிக்கும் சூழலை உண்டுபண்ணலாம். அந்தப் போட்டிகளில் வெற்றி பெறுவோருக்குப் பெருமதியான பரிசில்களை வழங்கலாம். வெற்றி பெற்றோரின் ஆக்கங்களைத் தேசிய நாளேடுகளிலும் வெளிவரச் செய்து அதை மக்கள் மயப்படுத்தலாம்.
- நபி(ஸல்) அவர்கள் குறித்துப் பேசும் கட்டுரைகள், சிறுவர் இலக்கியங்கள், சிற்றேடுகள் என்பவற்றைப் பல மொழிகளிலும் வெளியிடலாம்.
- நபி(ஸல்) அவர்களை நேசிப்பது மார்க்கக் கடமை. அவர்களது நேசிப்பது என்பது அவர்களை கண்ணியப்படுத்துவது, பின்பற்றுவது என்பவற்றை உள்ளடக்கியது என்பதைத் தெளிவுபடுத்தும் கட்டுரைகளையும், வெளியீடுகளையும் சமுகத் தலைவர்கள் பார்வைக்கு உட்படுத்தலாம்.
நிறுவனங்களின் பணி:
முஸ்லிம் சமுகத்தில் பல நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் நபி(ஸல்) அவர்கள் மீதுள்ள பற்றையும், பாசத்தையும் பின்வரும் வழிகளில் வெளிப்படுத்தலாம்.
- நபி(ஸல்) அவர்களது உண்மையான வாழ்வை உலகுக்கு எடுத்துக் கூறும் ஒலி-ஒளி நாடாக்கள், புத்தகக் கண்காட்சிகளை ஏற்பாடு செய்யலாம்.
- பிரதேச, தேசிய மட்டங்களிலான கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து முஸ்லிம் சிறுவர்-இளைஞர்களுக்கு நபி(ஸல்) அவர்களது வரலாற்றைப் போதிப்பதுடன் மாற்று மதத் தலைவர்களும் அறிஞர்கள், அரசியல் தலைவர்கள் போன்றோர் நபி(ஸல்) அவர்களது வாழ்வை அறிந்துகொள்ளத்தக்க கருத்தரங்குகளை ஏற்பாடு செய்யலாம்.
- நபி(ஸல்) அவர்களது வாழ்வை விபரிக்கும் இலவச வெளியீடுகளை விநியோகம் செய்யலாம்.
- நபி(ஸல்) அவர்களது ஸுன்னாவைப் பரப்புவதற்காகப் பாடுபட்ட நல்லறிஞர்களை இனங்கண்டு அவர்களையும், அடுத்தவர்களையும் ஊக்கப்படுத்துமுகமாகப் பரிசில்களையும், நினைவுச் சின்னங்களையும் வழங்கலாம்.
- மாற்று மொழிகளில் நபி(ஸல்) அவர்களது பன்முக ஆளுமைகளை விபரிக்கக் கூடிய வெளியீடுகளை வெளியிட்டு அதனைப் பல்கலைக் கழகங்கள், அரச-தனியார் பணியிடங்கள், நூலகங்கள், வாசிகசாலைகளுக்கு விநியோகிக்கலாம்.
- வருடாந்த நினைவு மலர்களை வெளியிட்டு அதன் மூலம் நபி(ஸல்) அவர்களது பண்பாடு, ஒழுக்கம், வழிகாட்டல்களை விபரிக்கலாம்.
- நபி(ஸல்) அவர்களது தூய வாழ்வை விபரிப்பதற்கும், அவர்கள் குறித்து எழுப்பப்படும் ஐயங்களுக்குப் பதிலளிப்பதற்குமெனத் தனியான அறக்கட்டளையை நிறுவி அதன் மூலமாக நூல் வெளியீடு, மொழியாக்கப் பணி, வலைப்பின்னல் எனப் பணிகளை விரிவுபடுத்தலாம்.
இணையத் தளங்களை நடத்துவோர்:
இணையத் தளங்கள் இன்றையத் தொடர்பூடங்களில் பிரிக்க முடியாத அம்சமாக மாறியுள்ளது. இணையத் தளப் பாவணையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இணையத் தளங்களை நடத்தும் முஸ்லிம்கள் நபி(ஸல்) அவர்கள் மீது தாம் கொண்ட அன்பை வெளிப்படுத்தப் பின்வரும் விதத்தில் பணியாற்றலாம்.
- இந்த மார்க்கத்தின் சிறப்பம்சங்களை இணையம் மூலம் தெளிவுபடுத்தலாம்.
- இஸ்லாம் அனைத்துத் தூதர்களுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தையும், அவர்கள் மீது அன்பு வைக்க இஸ்லாம் கட்டளையிட்டுள்ள செய்தியையும் தெளிவுபடுத்தலாம்.
- நபி(ஸல்) அவர்களது தூதுத்துவத்தின் சிறப்பம்சங்களையும், தனித்துவங்களையும் தெளிவுபடுத்தும் தனிப் பகுதியை இணையத்தில் ஏற்படுத்தலாம்.
- இணையத்தில் (chat) அரட்டையில் உரையாடும் போது நபி(ஸல்) அவர்களது வரலாற்றையும், அவர்கள் போதித்த கொள்கையையும் ஆய்வு செய்யுமாறு மாற்று மதச் சகோதரர்களிடம் வேண்டுதல் முன்வைக்கலாம்.
- நபி(ஸல்) அவர்களது சிறப்பம்சங்களையும், அவர்களது குறிப்பான சில ஹதீஸ்களையும் மாற்று மதத்தவர்களுக்கு (email) அஞ்சல் செய்யலாம். உதாரணமாக நபியவர்களின் மன்னிக்கும் பண்பு, விட்டுக் கொடுக்கும் போக்கு, சிறுவர்களுடன் அவர்கள் நடந்து கொண்ட விதம், இஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமை போன்ற அம்சங்களைக் குறிப்பிடலாம்.
- நபி(ஸல்) அவர்களது வாழ்வைப் பற்றிப் பேசும் சிறந்த நூற்கள், உரைகள் என்பவற்றை இணையத் தளத்தைப் பயன்படுத்தி மக்கள் மயப்படுத்தலாம்.
செல்வந்தர்களும், இஸ்லாமிய அரசும்:
எமது சமுகத்திலுள்ள செல்வந்தர்களும், இஸ்லாமிய அரசுகளும் நபி(ஸல்) அவர்கள் மீதுள்ள உண்மையான தமது அன்பையும், மரியாதையையும் வெளிப்படுத்தக் கடமைப்பட்டுள்ளனர். வெறுமனே நபி(ஸல்) அவர்களுக்காக மீலாத் விழாஎடுத்து விட்டு அல்லது மவ்லூதுஓதி விருந்து படைத்து விட்டு நாம் நபி(ஸல்) அவர்களுக்குரிய அன்பை வெளிப்படுத்தி விட்டோம் எனச் சிலர் எண்ணிக்கொண்டிருக்கின்றனர். இது தவறாகும். இஸ்லாமிய அரசுகள், செல்வந்தர்கள் என்போர் நாம் மேலே குறிப்பிட்ட அனைத்து அம்சங்களையும் ஊக்குவித்து ஒத்துழைப்பு நல்க வேண்டும். செல்வந்தர்கள், சாதாரண நூல் வெளியீடுகள்-கவிதை வெளியீடுகள் என்பவற்றுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தில் 10 வீதம் கூட இஸ்லாமிய வெளியீடுகளில் ஆர்வம் காட்டுவதில்லை. இஸ்லாமிய அரசுகளைப் பொறுத்த வரையில் நபி(ஸல்) அவர்கள் மீதான தமது பாசத்தை வெளிப்படுத்தும் இத்தகைய பணிகளை அரசின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகக் கொள்ள வேண்டும். இன்றைய முஸ்லிம் அரசுகள் சினிமா, கலை-கலாச்சாரம் என்ற பெயரில் நடக்கும் அநாச்சாரங்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தைக் கூட நபி(ஸல்) அவர்களது தூய வாழ்வை மக்கள் மன்றத்திற்கு வைப்பதற்கு அளிப்பதற்கு தவறி விட்டன. இருப்பினும் வருடம் ஒரு முறை மீலாத்நடத்தி, நபி மீதுள்ள பாசத்தை வெளிப்படுத்தி விட்டோம் என்று திருப்தி காண்கின்றன. அல்லது நடிக்கின்றன எனக் கூறலாம்.
எனவே, எமது ஈமானின் ஒரு அம்சமான நபி(ஸல்) அவர்கள் மீதுள்ள நேசத்தை வெறும் வெற்று வார்த்தைகளிலும் உண்ணும் உணவிலும் மட்டும் காட்டும் இந்தப் போக்கைக் கைவிட்டு விட்டு நபி(ஸல்) அவர்கள் மீதுள்ள நேசத்தை உள்ளத்து உணர்வுகளாலும், எமது ரூபத்திலும், நடத்தையிலும் வெளிக்காட்ட முனைவோமாக


Thanks for எழுதியவர்  மௌலவி  S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
and islam kalvi